தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. யாரும் எதிர்பாராதவகையில் இரண்டாவது அலை சுனாமி போன்ற தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அளவில் இன்று 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவது பெரும் சவாலாக உள்ளது. தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நேற்று 18,000ஐ கடந்தது.

இந்தநிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,86,344 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து, கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 17,164 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 10,54,746 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 147 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 14,193 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 5829 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1445 பேரும், கோவையில் 1257 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.