பாராளுமன்றக் கலைப்புக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றத்தின் முடிவு எப்படி அமைந்தாலும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டம் தொடரும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்குகள், நேற்று செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், குறித்த வழக்குகளில் வாதிகளுக்காக ஆஜராகி வாதாடி வந்த எம்.ஏ.சுமந்திரன், நேற்றைய தீர்ப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த வழக்கில் நாம் இரண்டு பிரதான கோரிக்கைகளை முன்வைத்தோம். ஒன்று, யூன் 20ஆம் திகதி தேர்தல் நடத்தும் அறிவிப்பு தவறானது என்பது. அடுத்தது, பாராளுமன்றம் கலைத்து மூன்று மாதங்களாகியும் புதிய பாராளுமன்றம் கூட முடியாத காரணத்தினால் பாராளுமன்றக் கலைப்புப் பிரகடனம் செல்லுபடியற்றது என்பது. முதல் விடயத்துக்கு வழக்கு விசாரணை ஆரம்பித்த முதல் நாளிலேயே முடிவு கிடைத்துவிட்டது. யூன் 20ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இரண்டாவது விடயம், தொடர்பில் வழக்கை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாத வகையில் நீதிமன்றம் முடிவு செய்து அறிவித்துள்ளத. எனினும் ஜனநாயகத்துக்கான எமது போராட்டம் தொடரும்." என்றுள்ளார்.