உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா ஒரே நாளில் 4வது இடத்துக்குச் செல்லும் நிலையில் உள்ளது.
நாட்டில் நாள்தோறும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,996 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் தற்போது 6ஆவது இடத்தில் உள்ள இந்தியா, ஒரே நாளில் பிரித்தானியா மற்றும் ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்துக்கு முன்னேறும் நிலையில் உள்ளது.
அதாவது, இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 287,679 ஆக உள்ளது. 5ஆவதுஇடத்தில் உள்ள ஸ்பெயினில் பாதிப்பு எண்ணிக்கை 289,360 ஆகவும், 4ஆவது இடத்தில் உள்ள பிரித்தானியாவில் பாதிப்பு எண்ணிக்கை, 290,143 ஆகவும் உள்ளது.
இந்நிலையில், இன்றும் வழமைபோன்று நாட்டில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படும் பட்சத்தில் இவ்விரு எண்களையும் இந்தியா ஒரே நாளில் எட்டி, 4ஆவது இடத்துக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் கடைசி இடத்தில் இருந்த ஈரானை பின்னுக்குத் தள்ளி, இந்தியா கடந்த 25 ஆம் திகதி, 10வது இடத்தைப் பிடித்த நிலையில், 29 ஆம் திகதி 9வது இடத்துக்கு வந்தது. தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி 7ஆம் இடத்தில் இதுந்து, தற்போது இத்தாலியை பின்னுக்குத் தள்ளி 6வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.