கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் கமல் ஹாசனை விட 890 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் போட்டியிட்டார். பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார், அமமுக சார்பில் துரைசாமி என்ற சேலஞ்சர் துரை, நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் வகாப் ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே கமல் ஹாசன், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை பின்னுக்கு தள்ளி வானதி சீனிவாசன் முன்னேறியுள்ளார்.
இதனால் கமல் ஹாசன், வானதி சீனிவாசன் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் வானதி சீனிவாசன் 890 வாக்குகள் அதிகம் பெற்று கமல் ஹாசனை பின்னுக்கு தள்ளினார்.
தற்போதைய நிலவரப்படி 890 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் முன்னிலையில் உள்ளார். வானதி சீனிவாசன் 45932 வாக்குகளும் கமல் ஹாசன் 45042 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
கமல்ஹாசன் - வானதி சீனிவாசனுக்கும் இடையே குறைந்த அளவு வாக்குகளே வித்தியாசம் உள்ளதால் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.