காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 300 அடி பள்ளத்தில் காதலியை தள்ளிவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுப்புழாவை அடுத்த மேலுகாவு பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 25). இவரும் இதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.

இதனையடுத்து பெற்றோர் கடும் எதிப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இருவரும் திடீரென மாயமானார்கள். இதனையடுத்து பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அலெக்ஸ் மற்றும் இளம்பெண்ணையும் தேடி வந்தனர்.

அப்போது அலெக்சின் மோட்டார் சைக்கிள் நாடுகாணிசுரம் என்ற மலையில் காட்சி முனை அருகே நின்றதை போலீசார் கண்டுபிடித்தனர். பெரிய மலை மற்றும் அருவிகளை கடந்து சென்று அங்கு சோதனை நடத்தினர்.

அப்போது அலெக்ஸ் அங்குள்ள மரக்கிளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இளம்பெண்ணை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. இதனையடுத்து வழுக்கும் 300 அடி பள்ளத்தில் போலீசார் இறங்கி தேடினர்.

அப்போது இளம்பெண் படுகாயங்களுடன் மயங்கி கிடந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அலெக்சின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

குறித்து போலீசார் கூறும்போது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் தனிமையில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி மலைப்பகுதியில் சந்தித்துள்ளனர். ஆபத்தான காட்சி முனையில் அமர்ந்து பேசியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலெக்ஸ் இளம்பெண்ணை 300 அடி பள்ளத்தில் தள்ளி விட்டுள்ளார்.

இளம்பெண் பாறைகளில் அங்குமிங்கும் மோதி பள்ளத்தில் விழுந்துள்ளார். ஆத்திரத்தில் இளம்பெண்ணை பள்ளத்தில் தள்ளிவிட்டதை உணர்ந்த அலெக்ஸ் 300 பள்ளத்தில் இறங்கி இளம்பெண்ணை தேடியுள்ளார். அப்போது இளம்பெண் கோரமாக ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அலெக்ஸ் இளம்பெண் இறந்து விட்டதாக பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மேலுகாவு போலீசார் தெரிவித்தனர்.

மேற்கொண்டு விபரம் இளம்பெண் கண் விழித்த பின்னர் தான் தெரியவரும் என்றும் போலீசார் கூறினர்.