திருச்சியில் இளம் பெண்ணை காதலிக்க வற்புறுத்தி, தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டது.
திருச்சி பொன்மலை அருகேயுள்ள மேல கல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரக்ஷன்யா (வயது 21). இவர் திருச்சியில் உள்ள பிரபல என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
அவரது பள்ளிக்கால ஆண் நண்பர், பொன்மலை ரெயில்வே குடியிருப்பைச் சேர்ந்த விஷால் (21). இவர் கும்பகோணத்தில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வந்தார். பள்ளிக்கால நண்பர்கள் என்பதால் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக நட்பு இருந்துள்ளது.
தங்களுடனான நட்பை தவறாக பயன்படுத்திய விஷால், பல நேரம், ரக்ஷன்யாவுக்கு தொலைபேசி மூலம் அழைத்து தன்னை காதலிக்குமாறு கூறுவதும், சில நேரங்களில் தற்கொலை செய்யவுள்ளதாக கூறுவதும் தொடர்ந்து வந்துள்ளது. மேலும் தன்னைத்தவிர வேறு யாரிடமும் பேசவோ, பழகவோ கூடாது எனவும் கட்டுப்பாடுகளை விதித்து வந்துள்ளார். இதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளான ரக்ஷன்யா கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டிய விஷாலை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை திருச்சி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இறுதி விசாரணை நடத்தப்பட்டு நேற்று கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த உள்ளிட்ட குற்றத்திற்காக மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி வனிதா தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசுத்தரப்பில் வக்கீல் அருள்செல்வி ஆஜராகி வாதாடினார்.