தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தும் வகையில் நீட் தேர்வு அச்சம் காரணமாக மற்றுமொரு மாணவன் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

தர்மபுரியை சேர்ந்த ஆதித்யா (வயது-20) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ளதுடன் தேர்வில் பங்கேற்பதற்காக மாணவ, மாணவிகள் தயாராகி வருகின்றனர்.

இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மாணவ, மாணவிகள் விபரீத முடிவுகளையும் எடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே மதுரையைச் சேர்ந்த 19 வயது மாணவி ஜோதிஸ்ரீ துர்கா நாளை நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் தேர்வு அச்சம் காரணமாக இன்று திடீரென தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்நிலையில், ஆதித்யா என்ற மற்றொரு மாணவன் உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த மாணவன் நாளை நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையிலேயே வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டுள்ளார்.

நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வு அச்சம் காரணமாக இன்று ஒரேநாளில் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.