ராஜபாளையதில் வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மதுபாட்டில் வயிற்றை குத்தி கிழித்ததில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அழகுமுத்து (வயது 30).
இவரது உறவினர் மணிகண்டன் (30). இருவரும் கூலித்தொழிலாளிகள். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டனின் மனைவி கோபித்துக் கொண்டு லெட்சுமியாபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனால் மனைவியை சமாதானப்படுத்துவதற்காக மணிகண்டன் அழகு முத்துவுடன் லெட்சுமியாபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அங்கு அவர்கள் சமாதானம் பேசினார்கள். அப்போது மணிகண்டனின் மனைவி தேர்தல் முடிந்ததும் வீட்டுக்கு வருவதாக தெரிவித்தார். இதையடுத்து மணிகண்டனும், அழகு முத்துவும் மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் அரசு மருத்துவமனை அருகே வந்தபோது ஒரு அரசியல் கட்சி கூட்டத்துக்காக வந்த வேன் முன்னால் சென்று கொண்டிருந்தது. அந்த வேனை முந்த முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் வேன் மீது மோதி வேகத்தடைக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு பேரிகாடில் விழுந்தனர்.
அழகுமுத்து தனது மடியில் மது பாட்டில் வைத்திருந்தார். கீழே விழுந்ததில் அந்த மது பாட்டில் உடைந்து அழகுமுத்து வயிற்றை கிழித்தது. இதில் அதிக அளவு ரத்தம் வெளியேறியது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மணிகண்டன் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் தெற்கு போலீசார் வேன் டிரைவர் மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.