தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த வாரம் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மற்ற மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 57 மாணவிகள், 1 ஆசிரியை, மாணவிகளின் பெற்றோர் 11 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 69-ஆக உயர்ந்தது.
இதேப்போல் பட்டுக்கோட்டை அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கும், மதுக்கூர் அருகே ஆலத்தூர் பள்ளியில் ஆய்வக பெண் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்தடுத்து 3 பள்ளிகளில் கொரோனா பரவிய சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் , அலுவலக பணியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 2 நாட்களாக கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அதில் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் சிலரின் முடிவுகள் வர வேண்டி உள்ளது.
கடந்த 1 வாரத்தில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் 4 பள்ளிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகள், ஆசிரியர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 57 மாணவிகள், 4 ஆசிரியர்கள், 1 ஆய்வக உதவியாளர் மற்றும் மாணவிகளின் பெற்றோர் 11 பேர் என 73 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல பள்ளிகளில் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடந்து வருகிறது. தொடர்ந்து பள்ளிகளில் கொரோனா பரவி வருவதால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.