மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் மீது அரசு பஸ் ஏறியதில் அவர் தலை நசுங்கி இறந்தார். பட்டுக்கோட்டையில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணையன். இவர் இறந்து விட்டார். இவருடைய மனைவி மகேஸ்வரி(வயது 45). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று மகேஸ்வரி வங்கியில் பணம் எடுப்பதற்காக தனது உறவினர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பின் பக்கம் அமர்ந்து பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து மகேஸ்வரி தவறி கீழே விழுந்தார். அந்த நேரத்தில் எதிர்புறம் வந்த அரசு பஸ்சின் பின்சக்கரம் மகேஸ்வரியின் தலையில் ஏறியது. இதில் மகேஸ்வரி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டுக்கோட்டை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் போலீசார், பலியான மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பரிதாப சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.