தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
வாகனத்தின் எரிபொருள், ஓட்டுநர் மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்காக மாதம் ரூ.75 ஆயிரமும், தனிப்பட்ட உதவியாளர் ஒருவரை நியமிக்க மாதம் ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பணிக்காக எம்எல்ஏக்களுக்கு அரசு கார்
அடிப்படை பொருளாதார வசதி இல்லாததால் சொந்தமாக கார் இல்லாமல் தொகுதி முழுவதும் சென்று ஆய்வு செய்ய முடியவில்லை என விசிக எம்எல்ஏ ஜோதிமணி சட்டப்பேரவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பேரவைத் தலைவர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எளிய பின்னணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மக்கள் பணியை தடையின்றி மேற்கொள்ள இந்த உதவிகள் வழங்கப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை எம்எல்ஏக்கள் வரவேற்றுள்ளனர்.
எம்எல்ஏக்கள் தொகுதியை ஆய்வு செய்ய பெட்ரோல் செலவுக்கு மாதம் 75 ஆயிரம் அவசியம் தேவை என்றும், அவருக்கு உதவியாளர் நியமிக்க 25 ஆயிரம் அவசியம் என்றும் முதல்வர் விஜய் கருதுகிறார்.
ஏனெனில் இந்த செலவுகளை சம்பளத்தில் செய்தால், அவர்கள் வாங்கும் ஒரு லட்சம் சம்பளம், அதற்கே சரியாக போகும் என்றும், அதன்பின்னர் அது ஊழலுக்கே வழிவகுக்கும் என்று தவெக அரசு எண்ணுகிறது. அதனால் இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம், ஏற்கனவே எம்எல்ஏக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பளம் வழங்கப்படும் நிலையில், வாகனம் மற்றும் உதவியாளருக்காக கூடுதலாக மாதம் ரூ.1 லட்சம் வழங்குவது தேவையற்ற செலவு என பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
பல தொகுதிகளில் எம்எல்ஏக்கள் மக்களை அடிக்கடி சந்திப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், இந்த செலவுகள் உண்மையில் மக்கள் பணிக்காக பயன்படுத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
