பணகுடி அருகே உள்ள கலந்தபனை புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது26), கூலித்தொழிலாளி. இவர் ஒரே வீட்டில் 2 மனைவிகளுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கூலி வேலைக்காக அடிக்கடி பணகுடி சென்று வந்தார். அப்போது தனக்கு திருமணமானதை மறைத்து பணகுடியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை காதலித்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டீபன் 10-ம் வகுப்பு மாணவியுடன் தலைமறைவானார். மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை காணாமல் பல்வேறு இடங்களில் தேடினார்கள்.

அப்போது ஸ்டீபன் ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் விசாரணை நடத்தி, 10-ம் வகுப்பு மாணவியை அவர் கடத்தி சென்றதால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

அப்போது அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு மாட்டுப்பண்ணையில் கூலி வேலை செய்து கொண்டு, அங்கேயே மாணவியுடன் தங்கி குடும்பம் நடத்துவதும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்டீபனை கைது செய்தனர். 10-ம் வகுப்பு மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

2 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய வாலிபர் 3-வதாக மாணவியை கடத்தி சென்றது மட்டுமல்லாமல், அவரது வீட்டருகே உள்ள மேலும் 2 இளம் பெண்களுக்கும் காதல் வலைவீசியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கைதான ஸ்டீபனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.