அலுவலக கடமைகளுக்காக உரிய கடமை நேரத்திற்கு பதிலாக நெகிழ்வான (Flexible) கடமை நேரத்தை தீர்மானிப்பது தொடர்பிலான வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நேற்யை தினம் இவ்வாண்டுக்கான பாடசாலை முதலாம் தவணை ஆரம்பமானதை தொடர்ந்து பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு ஆர்வம் கொண்டுள்ளனர். தற்போதைய கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் தமக்குரிய வானகங்களில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் கவனம் செலுத்தியுள்னர்.

இதனால் வீதிகளில் வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக பாடசாலை நேரம் பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் அலுவலகங்களில் கடமைகளை ஆரம்பிப்பதற்கான நேரங்களில் மாற்றங்களை மேற்கொண்டால் இந்த வீதி நெருக்கடியை தடுக்க கூடியதாக இருக்கும் என்ற கேள்விக்கு அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பிலஅமைச்சர் பதிலளிக்கையிலேயே இந்த விடயத்தை கூறினார்.

பாடசாலைகள் 7.30 மணிக்கு காலை ஆரம்பமாகின்றது. அதற்காக அலுவலகங்களில் 8.00 மணிக்கு கடமை நேரம் ஆரம்பமாகின்றது. வர்த்தக நிலையங்கள் 9.00 மணி அல்லது 9.30 மணிக்கு தமது கடமைகளை ஆரம்பிக்கின்றன.

இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் இந்த நேரமாற்றம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. வாரத்தில் 40 மணித்தியாலய கடமை நேரத்தை முழுமைபடுத்துவதில் தொழில்நுட்ப உதவிகளை பயன்படுத்துவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இவ்வாறான நடைமுறைகள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு மத்தியில் தனியார் துறை பணியாளர்களின் சம்பளக் கொடுப்பனவு தொடர்பில் இணங்கப்பட்ட கால எல்லையை நீடிப்பது குறித்தும் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

இலங்கை பெற்றுக்கொண்ட கடன் தொகையை திருப்பி செலுத்துவது தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில் கடன் தவணைக்கான நிலுவை வட்டியை செலுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு கடன் தவணைகளுக்கு வட்டியாக மாத்திரம் இந்த வருடம் 6,865 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது.

இந்த வருடத்தின் நாட்டின் கடன் சுமை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெளிவுபடுத்தினார். இலங்கை செலுத்த வேண்டியுள்ள வட்டியில் 5,351 மில்லியன் டொலர் தவணை முறையில் செலுத்தப்படவுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.