திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்து உள்ளது பச்சை மலை. இங்குள்ள வண்ணாநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கிணத்தூர் கிராமத்தில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் திருச்சி, துறையூர் மற்றும் பிறமாவட்ட பகுதிகளில் உள்ள பள்ளி-கல்லூரிகளில் தங்கி படித்து வருகிறார்கள். தற்போது கொரோனா காரணமாக பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படாமல், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் இவர்கள் தங்கள் சொந்த ஊரில் தங்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

பச்சைமலையை சுற்றி உள்ள மலை கிராமங்களில் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவை மட்டுமே உள்ளது. இந்த செல்போன் கோபுரம் வாரத்தில் ஒரு முறை மட்டுமே செயல்படுவதாக இங்குள்ள மலைவாழ் மக்கள் புகார் கூறுகிறார்கள்.

இந்தநிலையில் கிணத்தூர் கிராமத்தில் இருந்து மணலோடை செல்லும் வழியில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் தார்சாலை மட்டத்தில் இருந்து சுமார் 100 அடி உயரமுள்ள மலைக்குன்றில் மட்டுமே தொலைதொடர்பு சேவை கிடைக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த குன்று பகுதியில் மரக்குச்சிகள் மற்றும் இலை, தழைகளை கொண்டு தற்காலிக கொட்டகை அமைத்து படித்து வருகிறார்கள்.

இவர்கள் தங்கள் வகுப்பு நடைபெறும் நேரத்துக்கு ஏற்ப இங்கு வந்து பாடங்களை படித்து வருகிறார்கள். இதற்காக 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து பாடம் படித்துவிட்டு, வீட்டுக்கு செல்கிறார்கள். திடீரென கனமழை பெய்தாலோ, சூறாவளி காற்று அடித்தாலோ மலையிலேயே தவிக்கும் நிலை உள்ளது.

எனவே இப்பகுதி மாணவ- மாணவிகளின் நலன் கருதி, கூடுதலாக செல்போன் கோபுரம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.