தமிழக சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படவேண்டும். கொரோனா பரவல் தீவிரமாக உள்ள போதிலும், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், அதை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் சத்தமில்லாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 9.45 மணியளவில் நடைபெற உள்ளது.
கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.
இதற்காக அக்கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் இடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் கட்சி வளாகத்தில் 2 இடங்களில் நிர்வாகிகள் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டு உள்ளன. பிரமாண்ட எல்.இ.டி. டி.வி.க்களும் வைக்கப்பட்டு உள்ளன. செயற்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு, உறுப்பினர்கள் கருத்து கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி வளர்ச்சி பணிகள், தேர்தல் களப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதுடன், பொதுக்குழு தேதி குறித்து அறிவிப்பும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.