நாட்டில் முதன் முறையாக டெங்கு காய்ச்சலுக்கு உள்ளானவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இவ்வாறு இனங்காணப்பட்டவர் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர் என அவ்வைத்தியசாலையின் டெங்கு பிரிவின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குறித்த நபருக்கு ஏற்பட்ட அதிக காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனையின் பின்னர் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன் பின்னர் அவருக்கு தொடர்ந்தும் ஏற்பட்ட காய்ச்சலினால் 5ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நோயாளியை தேசிய தொற்று நோயியல் பிரிவிற்கு சிகிச்சைகளுக்காக மாற்றியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.