தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான அசானி புயல் தீவிர புயலாக மாறி வடக்கு ஆந்திரம் ஒடிசா கடற்கரையை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.

 


இந்த புயலின் தாக்கம் காரணமாக ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் கனமழை பெய்தது.

இந்த நிலையில் அசானி புயல் காக்கிநாடா, விசாகப்பட்டினத்தை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியை நெருங்கிய போது வலுவிழந்தது. அப்போது மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. கனமழையும் பெய்தது.

இது அடுத்த சில மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர பிரதேச மேற்கு மத்திய கடலோரப் பகுதியை நெருங்கும் என்றும் அதன் பின்னர் மெதுவாக வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மசூலிப்பட்டணம், நரசயூர், ஏனாம், காக்கிநாடா, துனி, விசாகப்பட்டினம் கடலோர பகுதி மற்றும் வடக்கு ஆந்திரா மேற்கு மத்திய வங்க கடலோரத்தில் இன்று மாலை நிலவும்.

அதனைத் தொடர்ந்து வடமேற்கு வங்கக் கடல் நோக்கி வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்க கூடும்.

இந்த புயலானது நாளை காற்றழுத்த பகுதியாக கடலுக்குள் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காக்கி நாடா கடலோர பகுதியில் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும் புயல் ஆந்திர கடல் பகுதி வழியாக நகரும் போது பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 

தமிழகத்திலும் ஒருசில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.