தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில், திமுக தலைவலர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்தக் கணிப்பில் திமுக கூட்டணி பெரும்பான்மை வெற்றியுடன் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டது. இதனால் தொtaliண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.

இன்று முழு ஊரடங்கு என்பதால் தொண்டர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து வெற்றியைக் கொண்டாட வேண்டாம் என்றும், கொரோனாவில் இருந்து ஒதுங்கி பாதுகாப்பாக இருக்குமாறும் தொண்டர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இதற்கு இடையில், திமுக தலைவலர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மு.கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் நேற்று இரவு சென்றார். அங்கே அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் பகுதிகளில், திமுக, தொண்டர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், “மே 6-ல் முதலமைச்சராக பதவியேற்கும் தளபதி மு.க.ஸ்டாலினை வாழ்த்த வயதில்லை; வணங்குகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவு இன்னும் வராத நிலையில், தொண்டர்கள் இவ்வாறு போஸ்டர் ஒட்டி இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகளும், பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளன.