வன ஊழியர்களும் கள ஆய்வாளர்களும் வலையில் சிக்கியுள்ள ஒரு சிங்க குட்டியை அதன் தாய் சிங்கம் அருகில் இருக்கும்போதே காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய மாநிலம் குஜராத்தில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்தில் இந்த சம்பவம் படமாக்கப்பட்டுள்ளது. இதனை வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டே சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வனப்பகுதியில் வேறு சில பாதுகாப்பு காரணங்களுக்காக விரிக்கப்பட்டிருந்த ஒரு வலையில், ஒரு சிங்கள் குட்டி ஒன்று மாட்டிக்கொண்டுள்ளது.

அதன் அருகிலேயே, இன்னும் சில குட்டிகளுடன் தாய் சிங்கம் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது.

அதனைப் பார்த்த வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கள ஆய்வாளர்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து வலையில் மாட்டியிருந்த சிங்கக் குட்டியை சாதுரியமாக கையாண்டு விடுவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் இரண்டு நிமிட பரபரப்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், சிங்கக்குட்டியை துணிச்சலாக காப்பாற்றிய 'நிஜ ஹீரோக்களுக்கு' பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.