மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளான இன்று, ஜெயலலிதாவின் சிலையுடனான அறிவுசார் பூங்காவையும், அருங்காட்சியகத்தையும்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.

இந்நிகழ்வில், துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம், அமைச்சர்கள், செய்தித்துறை இயக்குநர் பாஸ்கர பாண்டியன் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதாவின் ஆறு அடி உயர மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளதுடன் ஜெயலலிதாவிடம் பள்ளி மாணவியொருவர் மடிக்கணினி பெறுவது போன்று சிலையானது தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைவிட, அருங்காட்சியகத்தில் எட்டு அடி உயர மெழுகுச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் உள்ளது. பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அழகிய கட்டமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தை கடந்த மாதம் 27ஆம் திகதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

இந்த நினைவிட வளாகத்தில் அறிவுசார் பூங்காவும் மற்றொரு புறம் டிஜிற்றல் அருங்காட்சியகமும் கட்டப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்குச் செய்த சேவைகள், காணொளி மற்றும் ஒலி வடிவப் பிரிவு, ஜெயலலிதாவின் உரைகள், சிறுகதைகள், புகைப்படங்கள் என்பன அமைக்கப்பட்டு வந்தன.

இந்த பணிக்காக ஜெயலலிதா நினைவிடம் கடந்த 27ஆம் திகதியில் இருந்து மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவின் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று திறக்கப்பட்டுள்ளது.