அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டிகுறிச்சியில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை கல்லூரி மாணவ-மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து தூத்துக்குடி நான்கு வழி சாலையோரம் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் கல்லூரியை செயல்படுத்தி வருவதாகவும், கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு பஸ் வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை இல்லை என கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
மாணவர்களின் கோரிக்கைகளை மனுவாக பெற்று கல்லூரி முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.