இங்கிலாந்தில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இந்த உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத்தொடங்கியுள்ளது. கடந்த மாதம் 29-ம் தேதி முதல் முறையாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

அதனை தொடர்ந்து பலருக்கும் உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து, உருமாறிய கொரோனா பரவியவர்கள் மற்றும்  அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் தற்போதுவரை எத்தனை பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. 

அந்த தகவலின்படி, நாட்டில் இதுவரை மொத்தம் 58 பேருக்கு உருமாறிய கொரோனா பரவியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார்.