தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கினார்.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன் நிறுத்தப்பட்டுள்ளார். இதையொட்டி கடந்த டிசம்பர் மாதமே எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்.

 

ஏற்கனவே முதல் கட்ட பிரசாரத்தை முடித்த அவர் தற்போது இரண்டாவது கட்டமாக மீண்டும் தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த மாதம் (ஜனவரி) 20 மற்றும் 21 ஆகிய இரு தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்தார்.

 

 

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். காலை 9 மணியளவில் போரூரில் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திறந்த வேனில் நின்றபடி உரையாற்றி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்திற்கு பதிலடி கொடுத்தார்.

 

‘நான் சொல்வதையே முதல்வர் செய்கிறார், என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், நான் செய்வதைத் தான் ஸ்டாலின் சொல்கிறார். கடைசி வரை திமுக சொல்லிக்கொண்டே தான் இருக்கப்போகிறது. செய்யும் இடத்தில் அதிமுக இருக்கப்போகிறது. விவசாயிகள் படும் சிரமங்கள் என்ன? என்பது எனக்கு தெரியும் என்பதால் விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளோம். தேர்தல் வருவதற்கு முன்பே திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுவதுதான் அதிமுக அரசு’ என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

 

போரூர் பிரசாரத்தை தொடர்ந்து, அம்பத்தூர் செல்லும் முதலமைச்சர், அங்கு மகளிர் சுய உதவி குழுவினரை சந்தித்து அவர்களின் மத்தியில் உரையாற்றுகிறார்.  இந்த கூட்டம் முடிந்ததும் ஆவடியில் தகவல் தொழில்நுட்ப குழுவினரை சந்திக்கிறார். இதன் பிறகு திருவள்ளூர் சென்று விவசாயிகள், நெசவாளர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். பின்னர் அங்கிருந்து மாதவரம் சென்று பேசுகிறார். இறுதியாக மீஞ்சூரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

 

தேர்தல் பிரசாரத்திற்கு வந்த முதல்வருக்கு மாவட்ட அதிமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.