தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் நீண்ட விரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர்.
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் பலருக்கு, ரெம்டெசிவிர்’, ‘ஆக்டெம்ரா’ உள்ளிட்ட மருந்துகள் பெரிய அளவில் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டிய சூழல் இருப்பதால், டாக்டர்கள் இந்த மருந்தை வெளியில் வாங்க பரிந்துரைத்து வருகின்றனர்.
இதனால் டாக்டர்களின் பரிந்துரை சீட்டுகளுடன் நோயாளிகளின் உறவினர்கள் தெருத்தெருவாக மருந்தகங்களை தேடி அலைகின்றனர். இந்தநிலையில் ரெம்டெசிவிர்’, ‘ஆக்டெம்ரா’ போன்ற மருந்துகள் தேவைப்படுவோர் அரசிடம் பெற்று கொள்ளலாம் என தமிழக மருத்துவ பணிகள் கழகம் அறிவித்துள்ளது.
இதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் நேற்று முதல் சிறப்பு கவுண்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட உரிய ஆவணங்களை காட்டி மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த நோயாளிகளின் உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்தனர். சிறப்பு கவுண்ட்டர் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க கூட்டம் அலைமோதியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும், மருந்து வாங்குவதற்காக கூட்டத்தின் பாதியில் வந்து புகுந்த சிலருடன் அங்கிருந்தவர்கள் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் மருந்து விற்பனை செய்யும் கவுண்ட்டர் மாலை வரை ஓய்வின்றி இயங்கி கொண்டிருந்தது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ரெம்டெசிவிர்’, ‘ஆக்டெம்ரா’ போன்ற மருந்துகள் தேவைப்படுவோர், நோயாளியின் ஆதார் அட்டை, டாக்டரின் பரிந்துரை சீட்டு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை சான்று, சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் சென்று மருந்துக்கான பணத்தை அளித்து பெற்று கொள்ளலாம்.
ஒரு ‘ரெம்டெசிவிர்’ குப்பியின் விலை ரூ.1,545 ஆகும். அந்தவகையில் ஒரு நோயாளிக்கு 6 ‘ரெம்டெசிவிர்’ குப்பிகள் வழங்கப்படுகிறது. மேலும் 104 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டு மருந்து விவரங்களை கேட்டு பெறலாம். தேவையின்றி மருந்து பெற யாரும் வர வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.