வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-
தமிழக கடலோர பகுதியையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும்.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, திருச்சி, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும்.
நாளை (16-ந் தேதி) மற்றும் 17-ந் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.18, 19-ந் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம், ஈச்சன்விடுதி தலா 9 செ.மீ., ராமநாதபுரம் -8, திருத்துறைப்பூண்டி, பாபநாசம், மண்டபம்- தலா 7, மதுக்கூர், மணிமுத்தாறு, ராமேசுவரம், தலைஞாயிறு தலா-6, காயல்பட்டினம் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தென் மாநிலங்களில் இருந்து வருகிற 19-ந் தேதி விலகுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.