கோவை மாநகராட்சி நவாவூர் பகுதியை சேர்ந்த 1 வயது ஆண் குழ ந்தை, நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 11 வயது சிறுவன், ஆலாந்துறையை சேர்ந்த 6 வயது சிறுவன் ஆகியோர் காய்ச்சல் காரணமாக கடந்த 2 நாள்களுக்கு முன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு பரிசோதனை செய்ததில் டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தனி வார்டில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் தவிர பொள்ளாச்சியை அடுத்த சுப்பேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி காய்ச்சல் பாதிப்புக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து சிறுமி அரசு மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நஞ்சுண்டாபுரம் ஸ்ரீபதி நகரை சேர்ந்த 11 வயது சிறுமி டெங்கு பாதிப்புக்குள்ளாகி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் தற்போது 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கோவையில் டெங்குகாய்ச்சல் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.