இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, 40 ஆயிரத்து 263 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 10 ஆயிரத்து 886 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்திருந்தனர். மேலும், இந்த கொடிய வைரசுக்கு ஆயிரத்து 306 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவின் இன்றைய நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 42 ஆயிரத்து 836 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 29 ஆயிரத்து 685 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 761 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 83 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இந்த கொடிய கொரோனாவுக்கு நாடு முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 389 ஆக அதிகரித்துள்ளது.