திண்டுக்கல் அருகே உள்ள அலவாச்சிபட்டியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகள் காயத்ரி (வயது 18). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காயத்ரி, கல்லூரிக்கு கட்டணம் செலுத்த வேண்டுமென்று அவரது தாயிடம் கூறியுள்ளார். அப்போது 2 தினங்களில் பணம் தருவதாக அவரது தாயார் கூறியுள்ளார். இதனால் காயத்ரி, தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காயத்ரி, வட்டப்பாறை அருகே உள்ள தனது தோட்டத்து கிணற்றில் குதித்தார். 

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக, இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் காயத்ரி கிணற்று நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், கிணற்றில் மூழ்கிய காயத்ரியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்து தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.