செவ்வாய் கிரக பயணத்துக்காக ஹோப் விண்கலத்தின் எரிபொருள் நிரப்பும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் அதன் 30 நாள் கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.

இதுகுறித்து அமீரக விண்வெளி ஏஜென்சி வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-

அமீரகத்தில் உருவாக்கப்பட்ட ஹோப் விண்கலம் பூமியில் இருந்து செவ்வாய் கிரகம் செல்ல 49 கோடியே 35 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணம் செய்ய வேண்டும். அதற்காக ஹோப் விண்கலம் எச் 2 ஏ என்ற ராக்கெட் மூலம் பூமியில் இருந்து மணிக்கு 34 ஆயிரத்து 82 கிலோ மீட்டர் வேகத்தில் செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தப்படும்.

 

செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட உள்ள ஹோப் விண்கலம்.

இந்த விண்கலத்தின் சோலார் மின் தகடுகளின் உதவியால் 600 வாட் மின்சாரத்தை தயாரித்து பேட்டரிகளில் சேமித்து கொள்ளவும் முடியும். தொடர்ந்து இதன் மூலம் 2 ஆண்டுகளுக்கு 1000 ஜிகாபைட் தகவல்களை அனுப்ப முடியும். அங்கிருந்து சிக்னல் மற்றும் தகவலை பெற 13 முதல் 26 நிமிடங்கள் பிடிக்கும். இந்த விண்கலத்தின் மேலடுக்கில் உள்ள தகட்டில் அமீரக ஆட்சியாளர்கள் மற்றும் பட்டத்து இளவரசர்களின் கையெழுத்துகள் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

விண்கலத்தின் 3 சிறப்பு உணரும் பகுதிகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேலடுக்கில் உள்ள காலநிலை, பனி மேகங்கள், காற்று மண்டலத்தில் கலந்துள்ள ஆக்சிஜன், ஹைட்ரஜன் மூலக்கூறுகளின் அளவு உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட உள்ளது. தற்போது, ஹோப் விண்கலம் ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரத்தில் இருந்து 1000 கிேலா மீட்டர் தெற்கு பகுதியில் உள்ள டனகஷிமா ராக்கெட் ஏவுதளத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கு அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதி அமீரக நேரப்படி நள்ளிரவு 12.51 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான எரிபொருள் நிரப்பும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் 7 முதல் 9 மாதங்களில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை அடைய உள்ளது. விண்வெளி பயணத்திற்கான 30 நாள் கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.