திருமலை அருகே மாந்தோப்பில் புகுந்து மாங்காய் பறித்த சிறுவர்கள் வாயில் சாணம் திணித்த சம்பவம் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
திருமலை:
தெலுங்கானா மாநிலம், டோரூர் அடுத்த பொட்லதாண்டாவில் தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. காவலாளிகள் யாகுப், ராமு ஆகியோர் அங்குள்ள மாங்காய் தோட்டத்தை பாதுகாத்து வருகின்றனர்.
டோரூர் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 2 பேர் அம்மாபுரத்தில் உள்ள தங்களின் உறவினர்கள் வீட்டிற்கு சென்று மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர்.
அப்போது வரும் வழியில் பொட்லதாண்டாவில் உள்ள மாந்தோப்பிற்குள் சென்றனர். அங்கு மாங்காய்களை பறித்து சாப்பிட்டனர்.
இதனை கண்ட அங்கிருந்த மாந்தோப்பு காவலாளிகள் யாகுப், ராமு ஆகியோர் ஓடி வந்து சிறுவர்கள் 2 பேரையும் பிடித்து மாங்காய் திருடி சாப்பிட்டதை கண்டித்தனர்.
மேலும் சிறுவர்கள் இருவரது கைகளையும் கட்டி வைத்து, வாயில் மாட்டு சாணத்தை வைத்து சாப்பிடும்படி திணித்தனர். இதனை அவ்வழியாக சாலையில் சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் அதனை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து தகவலறிந்த டோரூர் போலீசார் சமூக வலைத்தளத்தில் வந்த வீடியோவை ஆதாரமாக வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.