ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இரண்டு பிரதான இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் எவ்வித தரவுகளும் திருடப்படவில்லை என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு (SLCERT) தெரிவித்துள்ளது.
நாட்டின் இரண்டு இணையத்தளங்கள் மீது நேற்று சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதை இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு உறுதிப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுநிர்வாக அமைச்சின் இணையத்தளம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீது, “தமிழீழ சைபர் படையணி” என்ற பெயரிலான குழுவினால் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வான்படையின் தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளது.
கவனத்தை ஈர்ப்பதும் கடும்போக்கான செய்திகளை பரப்புவதுமே இவ்வாறான செயற்பாட்டாளர்களின் நோக்கமாகும் என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் நிறைவேற்றதிகாரி லால் டயஸ் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தள செயலிழப்பானது, தாக்குதல் நடத்தப்படுபவரினால் இணையத்தளத்தின் தோற்றத்தினை மாற்றுவதன் மூலம் நிகழ்த்தப்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த முயற்சியின் மூலம் தரவுகள் திருடப்படவில்லை என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் நிறைவேற்றதிகாரி தெரிவித்தள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக, இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவினால் செயலணியொன்று நிறுவப்பட்டுள்ளது.
செயற்குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செயற்குழுவில் இணைய சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட முக்கிய அரச மற்றும் தனியார் துறை பங்குதாரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
குறித்த செயலணியினரால் பாதிப்புக்குள்ளான இணையத்தளங்களை அடையாளம் காண்பதற்கும் நிலைமையை நிவர்த்தி செய்வதற்கும் இயன்றதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிககையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நேற்று மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலானது, காலை 6.38 மணிக்கு கண்டறியப்பட்டதுடன், காலை 7.30 மணியளவில் இணையத்தளங்கள் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.