மே 31, 1981 எல்லோருக்கும் நினைவுகளின் படிகளில் அடிக்கோடிடும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. அதை அந்த பின்னிரவு சிலரின் தீய தீய்ந்த எண்ணங்களுக்கூடாக செய்தது. தமிழர்களின் அடையாளமாக- ஆசியாவின் அசைக்க முடியாத நூல்களின் கூடமாக- கல்வியின் திமிராக நிமிர்ந்து நின்ற புத்தகங்களின் ஆலயம் எரியூட்டப்பட்டது. அது, மறுநாள் வரை எரிந்து புகைந்து கொண்டிருந்தது.

சுதந்திரக்குக்கு முந்தைய இலங்கையில் ஆரம்பித்த ‘அரசியல் பிணக்குகள்’ அரைநூற்றாண்டின் பின்னர் இனப்பிரச்சினைகள்- ஆயுத மோதல்களாக வெடிக்க காரணமான காரியங்களில் முக்கியமானது யாழ் பொது நூலகத்தின் மீதான  வன்முறை. 1981 மே 31, யூன் 01 என்று இரண்டு நாட்கள் யாழ். பொது நூலகம் எரிந்து அடங்கியது. அதற்குள்ளிருந்த 97000க்கும் அதிகமான புத்தகங்கள்- வரலாற்று சிறப்பு மிக்க ஓலைச்சுவடிகள் என்பன கொடுந்தீயில் எரிந்து சாம்பலாகியது.

யாழ். பொது நூலகம் எரிந்து இன்று 39 வருடங்கள் கடந்து விட்டது. அதற்குள் இன விடுதலை வேண்டிய ஆரம்பித்த போராட்டம் வீறுகொண்டு எழுந்து கோலொச்சி- ஒட்டுமொத்த வல்லரசுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசினால் கருவறுத்தும் முடிக்கப்பட்டுவிட்டது. ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் படுகொலை, ஒரு மில்லியன் மக்களுக்கும் அதிகமானவர்களின் புலம்பெயர் வாழ்க்கை, இலட்சக்கணக்கானவர்களின் இடம்பெயர்- வாழ்விடங்களை தொலைந்த அலைக்கழிவு என்று செல்கிறது அவலங்களின் பின்னணி.