இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2076ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாக அடையாளம் காணப்பட்ட இருவரும் பஹ்ரேனில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து இன்று (திங்கட்கிழமை) வெளியேறியுள்ளனர் என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 885 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளனர் என கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 162 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதோடு, இந்த தொற்றிலிருந்து 1903 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
மேலும் 38 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம், இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.