அரசியல் களத்தில் எதிர் எதிர் அணியில் இருந்தாலும் மக்கள் நலனில் என் தந்தையுடன் இணைந்து செயற்பட்ட வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு பேரதிர்ச்சியளிக்கிறது என சட்டத்தரணியும் மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையொட்டி அவர் விடுத்திருக்கும் இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தலவாக்கலை கேதீஸ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற மாபெரும் ஸ்தாபனத்தை வழிநடத்தும் வல்லமை, தனி நபர் ஆளுமை கொண்ட இவரது மறைவு நிச்சயமாக நிரப்பப்பட முடியாத வெற்றிடமாகவே அமையும். எனது தந்தையின் எதிர்பாராத மறைவின்போது எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து ஆறுதல் கூறி என் தந்தையின் இறுதி சடங்கை முன் நின்று நடத்தியமை என் நெஞ்சை நெகிழ வைக்கிறது.நாட்டின் தற்போதைய நிலையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த காத்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் மனக்குமுறல்களுக்கு எப்படி வடிகால் கிடைக்கப் போகிறதோ தெரியவில்லை. பிரிவால் அதிர்ந்திருக்கும் அனைவருடனும் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன்.