கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுக்க இப்போது அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகி விட்டது. இந்த முக கவசங்கள் வான்வழியாக பறக்கிற துகள்களின் பரவலை குறைப்பதாக அமெரிக்காவின் கலிபோர்னியா டேவிஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலரும் கூறி உள்ளனர்.
அவர்கள் இது தொடர்பாக முக கவசம் அணியாத மற்றும் மருத்துவ தர அறுவை சிகிச்சை முக கவசம், இரு வகை என்-95 முக கவசங்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட காகித முக கவசம், வீட்டில் தயாரிக்கப்பட்ட பருத்தி முக கவசம் அணிந்த தன்னார்வலர்களிடம் துகள்களின் ஓட்டத்தை அளவிடுவதற்கான சோதனைகள் நடத்தி உள்ளனர்.
இந்த சோதனையின் முடிவுகளை ‘சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ்’ பத்திரிகைளில் வெளியிட்டுள்ளனர்.
அதில் மிக முக்கிய அம்சம், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் முக கவசங்கள் மற்றும் முக ஷீல்டுகள் முக்கிய கருவிகளாக மாறி உள்ளன என கூறப்பட்டுள்ளது.
மேலும், மேலே குறிப்பிட்ட துகள்கள் காற்று வழியாக மிதக்கிற அளவுக்கு சிறியவை. ஆனால் கொரோனா வைரஸ் போன்றவற்றை கொண்டு சொல்ல போதுமான அளவு பெரியவை என கண்டறிந்தனர்.
இந்த சோதனையின்போது மருத்துவ தர அறுவை சிகிச்சை முக கவசங்கள், என்-95 முக கவசங்கள் பேசும்போதும், இருமும்போதும் வெளிப்படும் வான்வழி துகள்களை 90 சதவீதம் தடுத்தது தெரிய வந்தது. எனவே இவற்றை அணிவது நல்லது.
அதே நேரத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட பருத்தியிலான முக கவசங்களின் துணியிலிருந்து சிறிய அளவிலான இழைகள் (துகள்களாக) வெளியே விடுவிக்கப்பட்டு வந்தன. இதனால், அந்த முக கவசங்களே துகள்களை வெளியிடுவதால், அவை காற்றில் வெளியேற்றப்பட்ட துகள்களை தடுத்தனவா என்று சொல்வது கடினம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், வீட்டில் தயாரிக்கப்பட்ட முக கவசங்கள் பெரிய துகள்களின் பரவலை குறைப்பத்தில் பயனுள்ளதாக இருக்கிறபோது, அந்த முக கவசங்களை தவறாமல் சுத்திகரித்து பயன்படுத்துவது முக்கியம் என விஞ்ஞானிகள் வலியுறுத்தி கூறி உள்ளனர்.