சோமாலியாவில் நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத்தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு 30பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் மொகாடிஷுவில் துறைமுகத்திற்கு அருகிலுள்ள உணவகத்திற்கு வெளியே நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துறைமுகத்திற்கு அருகிலுள்ள லுல் யேமன் உணவகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிகாரி மொஹமட் ஒஸ்மா கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘குண்டு வெடிப்பு மிகவும் வலுவானது மற்றும் குறிப்பிடத்தக்க அழிவை ஏற்படுத்தியது. அத்துடன் பொதுமக்கள் உயிரிழப்பை ஏற்படுத்தியது’ என கூறினார்.
இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் நாடு அல் கொய்தாவுடன் இணைந்த அல் ஷபாப் கிளர்ச்சியாளர்களின் தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொள்கிறது.
2011ஆம் ஆண்டு 20,000 ஆபிரிக்க ஒன்றிய அமைதி காக்கும் படையினரின் ஆதரவுடன் அரசாங்கப் படைகளால் அவர்கள் மொகாடிஷுவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஆனால் இந்த குழு இன்னும் நகரங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளை கட்டுப்படுத்துகிறது. அங்கு இருந்து அவர்கள் அரசாங்க இலக்குகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்துகிறார்கள். அதே போல் கென்யாவில் அவ்வப்போது எல்லையை கடக்கிறார்கள்.
1991ஆம் ஆண்டு முதல், சோமாலியா மட்டுப்படுத்தப்பட்ட மத்திய அரசாங்கத்தை மட்டுமே கொண்டிருந்தது மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் தன்னை மறுகட்டமைக்க முயற்சிக்கிறது.