டெல்லி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதியின் வீட்டிலிருந்து தற்கொலைப்படை அங்கிகள் மற்றும் பெருமளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, இரண்டு தற்கொலைப் படை அங்கிகள், ஒரு பெல்ட், 9 கிலோ வெடிபொருட்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். கொடி உட்பட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தும் நோக்கில் தற்கொலைப் படை அங்கிகள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்துள்ளது.
மேலும், டெல்லியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பயங்கரவாதி சிக்கியிருப்பதன் மூலம் மிகப்பெரிய தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இந்தியாவில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அந்தவகையில் உத்தரப் பிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்தகீம் கான் என்ற அபு யூசுப் என்பவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக செயற்பட்டுவந்ததை புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்ததுடன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக முஸ்தகீம் கானின் நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்காணித்த நிலையில் நேற்றுமுன்தினம் அவரைக் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆப்கானிஸ்தானின் கோரசான் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். தளபதிகளிடம் முஸ்தகீம் கான் பயிற்சி பெற்றது தெரிய வந்துள்ளது. அத்துடன், இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கோரசான் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணையத்தளம் வழியாகவும் முஸ்தகீம் கான் தொடர்பில் இருந்துள்ளார். இதனைவிட, காஷ்மீரில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்களுடனும் குறித்த நபர் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள முஸ்தகீம் கானின் சொந்த ஊரான பலராம்பூருக்கு அவரை அழைத்துச் சென்று பொலிஸார் சோதனையில் ஈடுபட்டபோது இவ்வாறு தற்கொலை அங்கிகளுடன் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.