வடக்கு - கிழக்கில் கட்டமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் இன அழிப்புக்கு எதிராகவும் சிறுபான்மை மக்களின் வாழ்வுரியையும் வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணி பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாணம் மாநகரை இன்று பிற்பகல் வந்தடைந்தது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்கில், வடக்கு - கிழக்கு சிவில், சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில், பல்வேறு அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் இந்தப் பேரணி கடந்த புதன்கிழமை பொத்துவில் ஆரம்பமானது.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஊடாக நான்காவது நாளான நேற்று கிளிநொச்சியை வந்தடைந்தது.
இன்று காலை கிளிநொச்சி நகரில் ஆரம்பமான மக்கள் எழுச்சிப் போராட்டம் பரந்தன், இயக்கச்சி, பளை, முகமாலை, கொடிகாமம், பளை, கைதடி, அரியாலை ஊடாக யாழ்ப்பாணம் மாநகரை வந்தடைந்தது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், நல்லூர் தியாக தீபம் நினைவுத் தூபி, நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றல் ஊடாக பேரணி பருத்தித்துறை வீதி ஊடாக வடமராட்சி மண்ணைச் சென்றடையும்.
இந்தப் போராட்டத்தில் தமிழ் பேசும் மக்களும் ஒன்றிணைந்து பேரெழுச்சியுடன் தமது வாழ்வுரிமையை சர்வதேச சமூகத்துக்கு ஒரே குரலில் எடுத்துரைக்கின்றமை சிறப்பு அம்சமாகும்.
பொலிஸாரின் தடைகளையும் மீறி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.