கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்துவரும் M.G.M மருத்துவமனை நிர்வாகம் நேற்று (சனிக்கிழமை) மாலை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவசர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவர் குழுவினர் அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் மருத்துவக் குழுவினரின் ஆலோசனையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அமைந்தகரை M.G.M மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 5ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.