கடலோர மாவட்டங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

வடக்கு அந்தமான் கடலில் நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது 24ம் தேதி புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 26ம் தேதி காலையில் ஒடிசா-மேற்கு வங்காளம் இடையே புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

 

இதையடுத்து, ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள கடலோர மாவட்டங்களில் போதிய சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அந்தமான் தீவுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

 

இது தொடர்பாக 4 மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவு நிர்வாகி ஆகியோருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர்  ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பி உள்ளார்.

 

அதில், புயல் பாதிப்பு உள்ள இடங்களை கண்டறிந்து, அங்குள்ள கொரோனா சிறப்பு முகாம்களில் உள்ள நோயாளிகளை மீட்டு வேறு முகாமிற்கு மாற்ற வேண்டும், கடலோர மாவட்டங்களில் சுகாதார வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும், மருத்துவமனைகளில் மின்சாரம், தண்ணீர், எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.