மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு எரிபொருள் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் புதுக்குடியிருப்பு ஐந்தாம் வட்டாரத்தினை சேர்ந்த ராஜேஸ்வரன் ரஞ்சித் (55 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதன்போது, காரில் பயணித்த ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளை கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.