கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பத்மபிரியா, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்த தனது பதிவில், 'சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன்.

அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும்' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசியல் பின்புலம் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த தன்னை, ஏற்றுக் கொண்டு வாக்களித்தமைக்கு மதுரவாயல் தொகுதி மக்களுக்கு தனது நன்றிகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கமீலா நாசர், மகேந்திரனை அடுத்து சந்தோஷ்பாபு ஐஏஎஸ் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'மக்கள் நீதி மய்யத்தில் நான் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற பொறுப்பினையும் ராஜினாமா செய்கிறேன். எனது இந்த முடிவு தனிப்பட்ட காரணங்களால் எடுத்த முடிவு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

கமல் மற்றும் எங்கள் குழுவினரின் பாசத்திற்கும் நட்பிற்கும் நன்றி.'' என்று அந்த பதிவில் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவராக இருந்த மகேந்திரன், கமல்ஹாசனின் மீது நம்பிக்கை குறைந்த காரணத்தால், அக்கட்சியில் இருந்து விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.