கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்றுள்ளனர்.


இதில் திமுக சார்பில் டி.ஆர். பாலு, ஆர்.எஸ். பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், வேடசந்தூர் பரமசிவம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் பங்கேற்றுள்ளார். காங்கிரஸ் சார்பில் விஜயதரணி, முனிரத்னம், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

விசிக சார்பில் சிந்தனைச் செல்வன், பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராம்ச்சந்திரன், மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மதிமுக சார்பில் சின்னப்பா, பூமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சின்னதுரை, நாகை மாலி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.  

ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “ரெம்டெசிவிர் மருந்தின் தேவை கருதி சென்னை மட்டுமின்றி மற்ற நகரங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா தடுப்பில் தமிழக அரசின் பணியில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இரவு பகல் பாராமல் கொரோனா தடுப்பு பணிகளுக்கு கட்டளை மையம் தொடங்கப்பட்டுள்ளது

மேலும் ஒரிசா, மே.வங்காளத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவர மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டு பலன் கிடைத்துள்ளது. சிங்கப்பூர், தைவான் நாடுகளில் இருந்து ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் வரவழைக்கப்படுகிறது. நோய்தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கு கட்டுப்பாட்டை கவனத்தில் கொள்ளாமல் சிலர் வெளியே சுற்றி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்ய சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்க அரசாணை வெளியிடப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.