யாஸ் (Yaas) அதிதீவிர சூறாவளியாக இந்தியாவின் ஒடிசாவின் Bhadrak மாவட்டத்தில் கரையைக் கடந்துள்ளது.

இதனால் வட மாநிலங்களிலும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது.

மணித்தியாலத்திற்கு 130 தொடக்கம் 140 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் மின் கம்பங்கள், மரங்கள் வேரோடு சரிந்துள்ளன.

புயல் கரையைக் கடந்தாலும் கடல் சீற்றத்துடனேயே உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

யாஸ் சூறாவளி வலுவிழந்து இன்று நள்ளிரவு ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜனாவை தாக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.

ஒடிசாவின் தாழ்நிலப் பகுதிகளை சேர்ந்த 6 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அண்டை மாநிலமான ​மேற்கு வங்கத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 இலட்சம் பேர் தாழ்நிலப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (25) மாலை ராமேஸ்வரம் தீவு பகுதி, பாம்பன் மண்டபம் பகுதியில் கடல் சீற்றமாகக் காணப்பட்ட நிலையில், இன்று பாம்பன் பகுதியில் கடல் நீர் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு உள்வாங்கி காணப்படுகின்றது.

இதனால் பாம்பன் சின்னப் பாலம் துறைமுகத்தில் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் அனைத்தும் தரைதட்டி நிற்கின்றன.

தரை தட்டி நிற்கும் ஆழ்கடல் படகுகளை கடலுக்குள் இழுத்துச் செல்லும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆழ்கடல் படகுகளை நிறுத்துவதற்கு இப்பகுதியில் சரியான துறைமுக வசதி இல்லாததால், சின்னப் பாலம் துறைமுகத்தில் நிறுத்தியதாகவும் பலத்த காற்றின் காரணமாக படகுகள் சேதமடைந்து தரைதட்டி நிற்பதாகவும் மீனவர்கள் கவலை வௌியிட்டுள்ளனர்.