திருவனந்தபுரம் அருகே அவசர சிகிச்சை பிரிவில் இடம் இல்லை என ஆம்புலன்சில் 4 மணி நேரம் அலைக்களிக்கப்பட்ட 78 வயது பெண் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் வாடனபள்ளி பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (வயது 78). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு சுவாசிக்க சிரமப்பட்டு வந்தார்.

இதையடுத்து அவரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதித்தனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று பாதித்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை ஆம்புலன்சில் திருச்சூர் அருகில் உள்ள எங்கண்டியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு கொரோனா அவசர சிகிச்சை பிரிவு வார்டில் படுக்கை வசதி இல்லை என ஆஸ்பத்திரி நிர்வாகிகள் கூறினர்.

இந்த நிலையில் பாத்திமாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கும் கொரோனா அவசர சிகிச்சை பிரிவு வார்டு முழுவதும் நோயாளிகள் இருப்பதால் இடம் இல்லை என தெரிவித்தனர்.

நோயாளியுடன் 4 மணி நேரமாக அலைகளிக்கப்பட்டதால் பாத்திமாவின் உறவினர்கள் இதுகுறித்து அப்பகுதி பஞ்சாயத்து தலைவருக்கு தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து கொரோனா உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.

இதையடுத்து இரவு 12 மணிக்கு பாத்திமாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அதிகாலையில் பாத்திமா பரிதாபமாக பலியானார்.

இதுதொடர்பாக பாத்திமாவின் உறவினர்கள் கூறுகையில், “78 வயதாக பாத்திமாவுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல 4 மணி நேரமாக ஆம்புலன்சில் அலைக்களித்ததால்தான் அவர் மரணம் அடைய நேரிட்டது” என கூறினர்.