கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட இந்து ஆலயங்கள் மீண்டும் திறக்கப்படும் போது தனிநபர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் ஆலய அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
எதிர்வரும் 12 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை தொடக்கம் இந்து கோவில்களில் வரையறைகளுடன் தனிநபர் வழிபாடுகளில் ஈடுபட முடியும்.
ஒரே சந்தர்ப்பத்தில் ஆகக்கூடியது 50 பேர் மாத்திரமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிநபர் வழிபாடுகளைத் தவிர்த்து ஏனைய கூட்டுச் செயற்பாடுகள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆலய அறங்காவலர் சபையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டுப்பிரார்த்தனை, திருவிழா மற்றும் அன்னதானம் வழங்கல் போன்ற செயற்பாடுகளின் போது பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகரின் அனுமதியைப் பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும்.
மேலும், ஆலயங்களுக்குள் பிரவேசிக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் குருமார்களும் பக்தர்களும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என இந்து கலாசார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
தேவை ஏற்படும் பட்சத்தில், ஆலயங்களுக்குள் கூடும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும்.
இயலுமானவரை வீடுகளில் இருந்து வழிபாடுகளில் ஈடுபட மக்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை ஆலய அறங்காவலர் சபை மேற்கொள்ள வேண்டும் என இந்து காலாசார திணைக்களம் அறிவித்துள்ளது.
தேவையற்ற விதத்தில் ஆலய வளாகத்தில் உரையாடுவதை தவிர்ப்பதுடன், மிகக்குறைந்த நேரத்தை ஆலயங்களில் செலவிடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆலய குருமார் மற்றும் பக்தர்கள் ஆலயத்தினுள் முகக்கவசம் அணிய வேண்டியதும் கட்டாயமாகும்.
ஆலயங்களில் பின்பற்றக்கூடிய அனைத்து வழிமுறைகளையும் நுழைவாயிலில் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்த்துதலின் போது பாரம்பரிய முறைப்படி வணக்கம் தெரிவித்தல் மிகவும் உகந்தது எனவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.