​​​சத்தியமங்கலத்தில் கல்லூரி விடுதி அறையில் ஓசூரை சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் கிருத்திகா (19). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இ.சி.இ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் கடந்த 15-ந் தேதி செய்முறை பயிற்சி வகுப்பிற்காக கல்லூரிக்கு வந்தார். இவருடன் விடுதி அறையில் தங்கி இருந்த மாணவிகள் ஊருக்கு சென்று விட்டனர். இதனால் மாணவி கிருத்திகா மட்டும் தனியாக விடுதி அறையில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்று கிருத்திகா தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. இதனால் அருகே உள்ள அறையில் இருந்த மாணவிகள் சந்தேகமடைந்து கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் மாணவி தங்கி இருந்த அறையின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது மாணவி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவி கிருத்திகாவின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.