யாழ்ப்பாணம் மாநகர சந்தைக் கடைத்தொகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களில் மேலும் 13 பேருக்குக் கொரோனா தொற்று உள்ளமை, நேற்று புதன்கிழமை (31) கிடைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என, வடமாகாண சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர கருவாட்டுக் கடை உரிமையாளர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டதை அடுத்து, யாழ். நகர சந்தைத் தொகுதியில் 117 பேர், நேற்று முற்பகல் வரை அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 541 பேரின் மாதிரிகள், முல்லேரியா ஆய்வுகூடத்துக்கு அனுப்பி வைக்கட்டன. அவற்றில், 13 பேருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு, நேற்று (31) காலை அறிக்கை கிடைத்துள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆயிரத்து 440 பேரிடம், கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாள்களில், பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டன.

அவற்றில், இதுவரை ஒரு தொகுதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, 35 பேருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனையவர்களின் மாதிரிகள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றன என்று, மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.