புதிய தொற்று அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் மேலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தவிர்க்க முடியாது என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

 

 

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி புதிய பாதிப்பு 23 ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது. இதில் 85.91 சதவீத பாதிப்புகள் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பதிவாகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமான புதிய தொற்றுகள் கண்டறியப்படுகின்றன. புதிய தொற்று 13 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதனால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

 

குறிப்பாக நாக்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1800 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, நாக்பூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வரும் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

புதிய தொற்று அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் மேலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தவிர்க்க முடியாது என முதல்வர் உத்தவ் தாக்கரே கூறினார். இதுபற்றி அடுத்த ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

ஜல்கோன் மாவட்டத்தில் திங்கட்கிழமை இரவு நேர மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கல்யாண் டோம்பிவிலி, நந்தூர்பார் ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை இரவுநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. துலே மாவட்டத்தில் மார்ச் 10ம் தேதியில் இருந்து நான்கு நாட்கள் மக்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. அவுரங்காபாத்தில் இன்று முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை இரவு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.