குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு அரக்கல் விளையை சேர்ந்தவர் கிரோஸ் டேக்கரின் மகன் ஷைபின் (வயது 32). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

 


இவருக்கும், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த அபினா(24) என்பவருக்கும் முகநூல் மூலம் காதல் மலர்ந்தது. இதையடுத்து அவர்கள் இருவீட்டாரின் சம்மதத்துடன், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது.

ஷைபினுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. மேலும், அவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு செல்வாராம். இதனை அவரது மனைவி அபினா கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இதுதொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்து கொண்ட அபினா, தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் ஷைபின் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஷைபின் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே ஷைபின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.